ஆ.சு. தயா,
20/UCMA/003.
அன்று காலை எட்டு மணி. நவம்பர் மாதம் என்றும் பாராமல், வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் சத்தத்தையும் மீறி, பக்கத்து வீட்டு வானொலியில் ஓடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் பாடல் இங்கு வரை தெளிவாகக் கேட்டது. வீட்டில் அன்று நானும் அம்மாவும் மட்டும் இருந்தோம். அம்மா வைத்த சாம்பாரின் மணம் வீடு முழுவதும் பரவியிருக்க, என்ன சாம்பார் எனப் பார்க்கச் சமையலறைக்குச் சென்றேன். அடுப்பில் லேசாகக் கொதித்துக் கொண்டிருந்த முள்ளங்கி சாம்பாரை நான் பார்த்துக் கொண்டிருக்க, யாரோ கதவைத் தட்டும் சத்தம் என் காதுக்கு கேட்டது.
மெல்ல கதவை நோக்கிச் சென்று கதவைத் திறந்து பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை. சற்று வெளியே சென்று எட்டிப் பார்த்தேன். திடீரென யாரோ என் கண்களையும் வாயையும் பொத்தி, என்னை வீட்டுக்குள் இழுத்துச் சென்றார். நான் அதையும் மீறி கத்த முயன்றதால், உடனே அவர் ஏதோ ஒரு துணியை எடுத்து, என் மூக்கில் வைத்து அழுத்தினார். சில நொடிகளிலேயே, நான் அரை மயக்கத்திற்குச் சென்றேன். ஒன்றும் புரியாமல் திணறினேன். என் மனதில் ஆயிரம் அச்சங்களும் எண்ணங்களும் எழுந்தன. அப்பா வேலைக்காக வெளியூர் சென்று விட்டார் என்பதைத் தெரிந்து க்கொண்டு இவர் வந்திருப்பாரா? இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே இருந்த என் அக்கா, இன்றுதான் தன் தோழிகளைப் பார்க்கப் போகனுமா? பக்கத்து வீடு வரை நான் கத்தியது கேட்டிருக்குமா? என்னை மீட்க யாராவது வருவார்களா? இவரின் நோக்கம் என்ன? போன்ற பல விடைத் தெரியாத கேள்விகளும் என்னுள் தோன்றின. மாடியில் துணிக் காய வைத்துக் கொண்டிருந்த என் அம்மா, கீழே ஓடி வரும் சத்தம் எனக்கு அந்த அரை மயக்கத்திலும் கேட்டது. அந்த நபர் என்னை நாற்காலியோடு சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தார். மாடியில் இருந்து ஓடி வந்துப் பார்த்த என் அம்மா பதற்றத்துடன், "யார் நீ? யார் நீ ? ஏன் இப்படி பன்ற?" என கதறி, என்னை விடுவிக்க விரைந்தாள். அந்த நபர் உடனே தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அதில் தோட்டாவை இறக்கி, என் அம்மாவை நோக்கிச் சுட, "அம்மா!" எனக் கதறியபடி தூக்கத்திலிருந்து விழித்தேன்…
படுக்கையில் இருந்த எனக்கு கொஞ்சம் நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. பயத்தில் உடலெங்கும் வியர்த்து என் சட்டையே நனைந்துவிட்டது. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டு ஆனது. மெதுவாக எழுந்து, என் அறையை விட்டு வெளியே வந்ததும், பக்கத்து வீட்டில் இருந்து எம்.ஜி.ஆர் பாடல் கேட்டது. ஒரு நிமிடம் பதறிப்போனேன். அதே முள்ளங்கி சாம்பார் மணமும் வீச, ஒன்றும் புரியாமல் என்னை நானே கிள்ளிப் பார்த்தேன். வலித்தது; மனமும் சேர்ந்து. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கனவில் நடந்தவை எல்லாம் அடுத்தடுத்து நிகழ, திகைத்துப் போனேன். இதயம் படபடக்கத் தொடங்கியது. பயத்தில் என் கால்கள் நடுங்கின. இவை அனைத்தும் தற்செயலாக நடந்தவைதான், என என்னை நானே சாந்தப்படுத்திக் கொண்டேன். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.
ஆனாலும் நான் பயந்தபடியே, யாரோ என் கண்களைப் பொத்தி என்னை வீட்டிற்குள் கொண்டு சென்றார். கனவில் நான் செய்த அதே தவறை மீண்டும் செய்து விட்டேன். கதவுத் துவாரத்தின் வழியாக வெளியே யார் இருக்கிறார் என்று பார்க்கத் தவறினேன். நான் கதவை திறந்திருக்கக் கூடாது, என என்னை நானே மனதிற்குள் திட்டிக் கொண்டேன். ஒருவேளை நான் கத்தினால், கனவில் வந்ததைப் போல என்னை மயங்க வைத்து விடுவார் என எண்ணி, அமைதியாக செய்வதறியாது தவித்தேன். எப்படி தப்பிக்கலாம் என யோசித்தேன். அவர் கையில் வைத்திருந்த கத்தியை என்னால் சிரமப்பட்டுப் பார்க்க முடிந்தது. பயத்தின் உச்சத்தில் இருந்தேன். திடீரென ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்க, "அம்மா!" எனக் கத்தினேன். அவர் என் கண்களிலிருந்து அவருடைய கைகளை எடுத்துவிட, நான் கண்களைக் கசக்கி பதறிப்போய் அம்மாவைத் தேடினேன்.
எதிரில் சிரித்தபடி நின்றுக்கொன்டிருந்த அம்மாவைப் பார்த்தவுடன் பெருமூச்சு விட்டேன். சுற்றிலும் என் தோழிகள் என்னைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். எனக்கு பின் என் தோழி ஒருத்தி கேக்கோடும் கத்தியோடு நின்று கொண்டிருந்தாள். அவள்தான் என் கண்களைப் பொத்தி என்னை அழைத்து வந்தாள் எனத் தெரியவந்தது. வெடித்தது துப்பாக்கி அல்ல, பார்ட்டி பேப்பர் என்பதை கீழே சிதறிக் கிடந்த வண்ணக் காகிதத் துண்டுகளைக் கண்டு அறிந்தேன். கண்ட கனவில் நான் முற்றிலும் மறந்து விட்டேன், அன்று என் பிறந்தநாள் என்பதை...
"உனக்கே தெரியாமல், உன் பிறந்தநாளன்று உன்னை சந்தித்து மகிழ்விக்கலாம் என நாங்கள் வந்தோம். உன் அம்மாதான் எங்களுக்கு உதவினார். சற்று நேரத்திற்கு முன்பு நீ கதவைத் திறப்பதற்கு முன்பே, நாங்கள் அனைவரும் உன் வீட்டில்தான் ஒளிந்து கொண்டிருந்தோம். நீ இப்படி பயப்படுவாய் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை!", என என் தோழிகள் என்னை கேலி செய்து சிரித்தனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த அந்த கனவைப் பற்றி சிந்தித்தபடியே, நானும் அவர்களோடு சிரித்தேன்.
Great work! Keep going!