ஆ. சு. ஜீஜீ
18/UCMA/005
டிரிங்ங் டிரிங்ங்……… டிரிங்ங் டிரிங்ங்…….
கடிகாரம் வெடித்துவிடும் அளவிற்கு ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தது
ஒரு வித மயக்கத்துடன் எழுந்தான் கதிரவன். கண் விழித்து அவன் முதலில் பார்த்தது தமிழ்வாணனின் களிப்புக் கரை புரண்டு ஓடும் முகத்தைத்தான். தமிழ்வாணன் அவனுடைய அப்பா. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் அவனுடைய நண்பன், வழிகாட்டி, ஆசிரியர் எல்லாமும். இன்று ஏன் இவ்வளவு மகிழ்ச்சி என்று கேட்கிறீர்களா?
கதிரவன் ஒரு ஆராய்ச்சியாளன். ஐந்து ஆண்டுகளாக ஒரு விதையைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு தான் தெளிவான முடிவு கிடைத்தது. அதை இந்திய அறிவியல் கழகத்திற்கு அனுப்பி வைத்தான். தமிழ்வாணன் இன்று அதிகாலையிலேயே கணினியைத் தட்டி தட்டி கதிரவனின் இமெயிலைப் பார்த்தார். பார்த்தவருக்கு ஆச்சரியம், ஆனந்தம், மட்டற்ற மகிழ்ச்சி. அறிவியல் கழகத்திலிருந்து அந்த விதைக்கு ஒப்புதல் அளித்து பதில் அஞ்சல் வந்திருந்தது.
அப்போதுதான் படுக்கையைவிட்டு மெல்ல நகர்ந்தான் கதிரவன். “டேய் கதிரவா! எழுந்திரு டா, இங்கே பாரு. உன்னுடைய ஆராய்ச்சிய மேற்கொண்டு நகர்த்த ஒப்புதல் கொடுத்திருக்காங்க! “ அவர் கண்களில் நீர் மல்கியது.
கதிரவன் அன்று இரவே டில்லி கிளம்பிவிட்டான். அவனுடைய திட்டம் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்றுக் குடும்பமே காவடி எடுத்தது. பலனாக, கதிரவனின் விதை தாவரமாகியது. விளைந்தது என்ன என்று தெரியுமா? முருங்கைக்காய் போன்ற காயில் முத்து முத்தாக தங்க நாணயங்கள். இது ஒரு அரிய கண்டுபிடிப்பு என்று நான் சொல்லவும் வேண்டுமோ?
நெற்கதிர்களுக்குப் பதில் இனி தங்கம் விளையப்போகிறது. கரும்புகளுக்குப் பதில் இனி தங்கம் அரும்பப்போகிறது. மாமரங்களுக்குப் பதில் இனி தங்க மரங்கள் அலங்கரித்து நிற்கப்போகின்றன. இவை எல்லாமே சாத்தியமானது கதிரவனால் தானே!
நாளுக்கு நாள், கதிரவனின் மதிப்பு கூடிக்கொண்டே இருந்தது. உலக அறிவியல் மாநாடுகளில் அவனும் அவனுடைய கண்டுபிடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டன. முதலில் ஆய்வுக்கூடத்தில் வைத்து வளர்க்கப்பட்ட தங்க விதைகள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன. அதுவும் மலிவான விலையில். சும்மா விடுவரா நம் மக்கள்? பொது மக்களும் அதை வாங்கிப் பயிரிட்டனர்.
உலகமெங்கிலும் தங்கவிதை திட்டம் வைரஸைவிடவும் வேகமாக பரவியது.
முதலில் எல்லோரும் அந்த விதைகளை வாங்கி வீட்டுத்தோட்டத்தில் தான் விதைத்தனர். ஓரிரு ஆண்டுகளில் அமெரிக்கர்கள் கட்டடங்களை இடித்து தங்கவிதை விதைத்தனர். ரஷ்யர்கள் தொழிற்சாலைகளைத் தரைமட்டமாக்கினர். ஆப்பரிக்கர்கள் காடுகளை அழித்து விதைநிலமாக்கினர். இந்தியர்களும் ஆஸ்திரேலியர்களும் ஏற்கனவே இருந்த பயிர்களை அழித்து தங்கவிதை திட்டத்தை அமல்படுத்தினர். ஜப்பானியர்களும் சீனர்களும் தங்க விதை திட்டத்தைச் சட்டமாக்கினர். ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தங்க விதை நட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர். வரி விதிப்பும் ஜோராக நடந்தது.
எங்கே பார்த்தாலும் கதிரவன் கதிரவன் என்ற ஒற்றை பெயரே எங்கும் ஒலித்து கொண்டு இருந்தது. மக்கள் அவனைக் கடவுளாகப் பாவித்து தினமும் வணங்கி வந்தனர். அவ்வளவு ஏன்? காலெண்டர் முதல் காஸ் சிலிண்டர் வரை எல்லாவற்றிலும் அவனுடைய முகம் ஜொலித்துக்கொண்டிருந்தது.
கதிரவனும் தன்னுடைய வாழ்க்கையில் எப்போதும் பார்த்திராத செல்வத்தை அடைந்திருந்தான். தனக்கென தனியே பங்களா, தனக்கென தனியே விமானம் என செழிப்புடன் இருந்தான். மகிழ்ச்சிக்கும் எவ்வித குறையும் இல்லை. பெற்றோருக்கோ அளவில்லா கர்வம்! அனைத்து மதத்தினரும் தங்கவிதை திட்டத்தை இறைவனின் ஆசி என்று நம்பினர்.
மக்கள், கிடைத்தத் தங்கத்தை வைத்து பங்களா, மகிழுந்து, நிறைய பணம் என்று கிடைத்ததையெல்லாம் வாங்கிப்போட்டனர். பசி எடுத்தால் தண்ணீர் மட்டும் பருகினர். மீதம் இருந்த உணவு அவர்களுக்குப் போதவில்லை.
பிரச்சினை அப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது என்று அவர்களுக்கு புரியவில்லை.
நாளடைவில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் பசியின் பிடியில் சிக்கித்தவித்தனர். ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். மீதம் இருந்த கொஞ்ச நஞ்ச உணவும் களவுப் போனது. அரசு எதுவும் செய்ய இயலாத ஊமைப்பொம்மை ஆகிப்போனது. நெற்கதிர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி எவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ முடியும்?
மக்கள் கொத்துக் கொத்தாக பசியின் பிடியில் சிக்கி மாண்டு போயினர். உலகின் முக்கிய தலைவர்களும் உணவில்லாமல் மடிந்து போயினர். எஞ்சி இருந்த மக்கள் கதிரவனைச் சபிக்கத் தொடங்கினர். “கதிரவன் மனிதனே இல்லை ; சாத்தானால் படைக்கபட்ட ஜீவன், அவன் ஒரு மந்திரவாதி, அவன் உயிரோடு இருக்க கூடாது” என்றெல்லாம் வசைப் பாடினர்.
ஒரு நாள் கதிரவன் அவனுடைய தானிய கிடங்குக்குச் சென்றான். அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கடைசிப் பருக்கு மிச்சம் இருந்த நேரத்தில் அதையும் அவனுடைய அப்பா அம்மா “நான் தான் சாப்பிடுவேன், நான் தான் சாப்பிடுவேன்! “ என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த கதிரவன் வெகுண்டெழுந்தான். “கஷ்டபட்டு உணவைக் கோடி ரூபாய் கொடுத்து வாங்கி வந்தது நான். நீங்கள் இருவரும் சண்டை இடுகிறீர்களா? உங்களை!!!! “என்று பாய்ந்து வந்து அவர்களை மூர்க்கத்தனமாய்த் தாக்கினான் . அவனை அறியாமல் அறைந்ததில் பக்கத்திலிருந்த இரும்பில் மோதி தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
“அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ………… “
பதறி எழுந்து உட்கார்ந்தான். தலையில் யாரோ சுத்தியல் வைத்து அடித்தது போன்ற வலி. ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே அவனுக்குப் புரியவில்லை. தமிழ்வாணன் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார். “என்னடா, பகல் கனவு எதாச்சும் கண்டியா? மணி ஏழாகுது! ஆராய்ச்சி, ஆராய்ச்சினு ஊர் சுத்தாம ஏதாவது உருப்படியா வேலை தேடு! “
கதிரவனுக்கு தலைசுற்றியது. தன்னுடைய ஆராய்ச்சியை எண்ணி பெருமைப்படுவதா? கனவில் கண்டது போல விபரீதம் நடந்துவிடும் என்று அஞ்சுவதா? அப்பா சொல்வது போல வேலைக்குப் போவதா? ஐந்து ஆண்டு ஆராய்ச்சியைக் கைவிடுவதா?
இந்த கேள்விகளுக்கு நடுவே ஒரு தீர்க்கமான முடிவு தென்பட்டது.
தன்னுடைய அலமாரியைத் திறந்து சில நீல நிற கோப்புகளை எடுத்தவன் நேரே வீட்டின் பின்புறம் சென்றான். அங்கே ஒரு சின்ன நாளிதழ் குப்பையைப் போட்டான் . அதில் தீக்குச்சியைக் கிழித்துப் பற்றவைத்தான். பெருமூச்சு ஒன்றைக் காற்றில் கலக்க விட்டான். தன் கையில் கொண்டு வந்திருந்த கோப்பைகளை (குப்பைகளை) தீக்கு இரையாக்கினான். தன்னுடைய கண்டுபிடிப்பை நினைத்து வெட்கித் தலை குனிந்தான்.
உணவு உலகினும் பெரிது. விவசாயம் விண்ணினும் பெரிது.
அருமையான கதை அக்கா!!!